Home Exclusive பக்கம்

Exclusive: அரை நூற்றாண்டு பாரம்பரியம்! நம்ம வீடு வசந்தபவன் வளர்ந்த கதை! மனம் திறந்த ரவி!

16

சென்னை: சென்னையில் உள்ள உணவகங்களில் ‘நம்ம வீடு வசந்தபவன்’ உணவகத்துக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உண்டு. காலை டிஃபனா, மதியம் லஞ்சா, விடுப்பா வண்டியை வசந்தபவனுக்கு என பலரும் தேடி வந்து சாப்பிடுகிறார்கள் என்றால் அதற்கு பின்னணியில் சுவை மட்டுமல்ல சுத்தம், தரம், தொழில் நேர்மை என இன்னும் பல காரணங்கள் உள்ளன.

இது குறித்து நம்ம வீடு வசந்தபவன் இயக்குநர் ரவி முத்துக்கிருஷ்ணனிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட விவரம் வருமாறு;

ஹோட்டல் தொழில்

”நெல்லை மாவட்டத்தில் உள்ள முனைஞ்சிப்பட்டி தான் எங்களுக்கு பூர்வீகம். விவசாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் ஹோட்டல் தொழிலுக்கு மாறியதன் பின்னணியில் பெரிய கதையே உள்ளது. ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிய தகவல் தான் இது, அப்பா முத்துகிருஷ்ணன் 1960களில் இலங்கைக்கு சென்று ஹோட்டல் தொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அங்கு தொழிலில் ஈடுபட்ட பொழுது நாட்டின் சூழ்நிலை சரியாக அமையவில்லை என்பதால் தமிழகம் திரும்பிய அப்பா, 1969ஆம் ஆண்டு திருச்சியில் வசந்த பவன் என்ற பெயரில் ஹோட்டல் ஆரம்பித்தார்.”இவர் எப்போதுமே புதுமையாக சிந்திக்க கூடியவர் அதனால் வட இந்திய உணவுகளை திருச்சிக்கு அறிமுகம் செய்தார் என்ற பெருமைக்குரியவர் !

சென்னையில் கிளை

”திருச்சியை தொடர்ந்து 1971ஆம் ஆண்டு சென்னையில் வசந்தபவன் ஹோட்டலின் கிளையை அப்பா தொடங்கினார். என் படிப்பு முடித்த பிறகு திருச்சியில் உள்ள வசந்தபவன் ஹோட்டலை பார்த்துக்கொள்ளச் சொன்னார் அப்பா. ஆனால் நான் சென்னைக்கு தான் செல்வேன், அங்குள்ள கிளையை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி திருமணத்துக்கு பிறகு சென்னை வந்தேன். பொதுவாக அந்தக்காலத்தில் ஹோட்டல் என்றால் இட்லி, தோசை, காஃபி, தயிர் சாதம் என்று தான் மெனு இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்தக் காலத்திலேயே வசந்தபவனில் லஸ்ஸி, பாதாம் மில்க், ரொட்டி மற்றும் பல்வேறு உணவு வகைகள் என பல புதிய பண்டங்களை மெனுவில் வைத்திருந்தோம்.”

சமரசமில்லா தரம்

”அப்பாவும் சரி நானும் சரி தரத்தில் மட்டும் சமரசமே செய்துக்கொள்ள மாட்டோம். அதனால் தான் எங்களால் இந்த ஹோட்டல் தொழிலில் அரை நூற்றாண்டைக் கடந்தும் நிற்க முடிகிறது. காய்கறிகளை சுத்தம் செய்வது தொடங்கி சமையல் எண்ணெய் வரை எல்லாமே ஹைஜீனிக்காக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். இதனால் தான் தினமும் வாங்கிய காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து அதனை நறுக்க அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம் வெறுமனே லாபம் பார்க்க மட்டும் இந்த தொழிலை நான் நடந்தவில்லை. ஒருவருடைய பசியை தீர்ப்பது புண்ணியம் தரும் என்பதாலேயே இந்தத் தொழிலை இன்னும் விரிவுப்படுத்தி நடத்தி வருகிறோம்.”

காலையில் 6 மணிக்கு

”என் மனைவி சொர்ணலதாவும் ஹோட்டல் பிசினஸை கவனித்துக் கொள்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஹோட்டல் கிச்சனுக்கு சென்று விடுவாங்க. குவாலிட்டியில் சின்னக் குறைக் கூட இருக்கக் கூடாது என நினைக்கக் கூடியவர் எனது மனைவி. அதேபோல் விபி வேர்ல்ட் என்ற பெயரில் அண்ணா நகர் மற்றும் தாம்பரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகங்களில் உலக நாட்டு உணவு வகைகள் எல்லாம் கிடைக்கும். இதனை எனது சின்ன மகன் ஆனந்த் கவனித்துக்கொள்கிறார். மருத்துவம் படித்த மூத்த மகன் வசந்த் இப்போது சினிமாவில் நடித்து வருகிறார். இதனிடையே சென்னையில் மட்டும் எங்களுக்கு 25 கிளைகள் உள்ளன. இதனை இன்னும் பல நகரங்களில், மாநிலங்களில், நாடுகளில் விரிவுப்படுத்தும் முயற்சியில் உள்ளோம்.”

தொழில் மீது காதல்

”நீங்க எந்தத் தொழிலை செய்ய நினைத்தாலும் அதன் மீது உங்களுக்கு தீராத காதல் வேண்டும் , அப்போதுதான் அது உங்களுடன் பயணிக்கும் வெறுமனே காசு பார்க்கலாம் என்பதை கடந்து தொழிலை நேசித்து செய்துவந்தால் உங்கள் முன்னேற்றத்தை உங்களாலேயே தடுக்க முடியாது. ஆரம்பத்தில் தோல்விகள் வரத்தான் செய்யும், அதனை ஏற்றுக்கொண்டு எதிர்நீச்சல் அடிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால் எல்லாம் ஜெயமாகும். நாளை நமதே வெற்றியும் நமதே.”